மனதின் தேடல் - 1
அவளைப் பற்றி சொல்லத் தொடங்கியதுமே என் இதயத் துடிப்புகள் அதிகரிக்கத்தான் செய்கிறது. இதுதான் காதல் துடிப்போ என்று எண்ணி பலமுறை சிரித்ததும் உண்டு, புரியாமல் குழம்பித் தவித்ததும் உண்டு. சரி சரி கதைக்கு வருவோம், நான் முதல் முதலில் அவளைப் பார்த்த தருணமே இனம் புரியாத ஓர் பேருணர்வு என்னுள் ஒட்டிக்கொண்டது என்றும் பிரிக்க முடியாத பசைப்போல. அதை விவரிக்க முடியாது, நீங்கள் அதை அனுபவித்தால் கண்டிப்பாக உணர முடியும். அப்போது எனக்குத் தோன்றியது இவள்தான் என் வாழ்க்கைத் துணை என்று. ஆனால் ஒருவன் ஒரு முடிவு எடுப்பதற்கு பல குழப்பங்கள் நிகழும்தானே, அதுபோலத்தான் எனக்கும் பல குழப்பங்கள். ஏன் என்றால் அவள் என்னைவிட சற்று சிறியவள். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மிகச்சிறியவள் என்றே சொல்லலாம். என்ன குழப்பமாக உள்ளதா எனக்கும் அப்படித்தான் உள்ளது என்ன செய்ய என் எண்ண அலைகளுக்கு எப்படிப் புரியும், அவளை காந்தம்போல கவர்ந்து பிரியாமல் ஒட்டிக்கொண்டது. நான் என்ன செய்வது? என்னால் முடிந்தது நான்கு வரிக் கவிதைதான் எழுத முடிந்ததே தவிர வேறென்ன.
வேறென்ன..? வாழ்வே தேடல்தான். அத்தேடல்கள் அனைத்தும் பல பரிமாணங்களில் அவர் அவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போலவும், சூழலுக்கு ஏற்றாற்போலவும் அதன் அளவு சற்று சிறியதாகவோ அல்லது பெரிய தேடலாகவோ இருக்குமே தவிர, தேடல் தேடல்தானே அது இல்லாத வாழ்க்கை ஏது. அதைப்போலத்தான் என் வாழ்க்கைத் தேடலும்...பல தேடல்கள் நிறைந்ததாகவே இருந்தது, இருக்கிறது. அதில் அறிவுத்தேடல், பொருட்தேடல், அன்புத்தேடல், இன்பத்தேடல், பாசத்தேடல், கல்வித்தேடல், தனிமையின் புரியாத தேடல்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வரிசையில் என் காதல் தேடலும் பயணப்படத்தான் செய்தது. அதன் தேடலை என்னும் போதெல்லாம் எவருக்கும் இன்பம் அதிகரிக்கத்தான் செய்யும். அது போலத்தான் என் காதல் தேடலும் தொடர்ந்தது. என் அன்பிற்குரிய பாரதிக்கு கண்ணம்மாவைப் போல, எனக்கு இவள் கண்மணி.
![]() |
| காதல் |




No comments:
Post a Comment